பகலில் லாரி ஓட்டுநர்கள், இரவில் ஏடிஎம் கொள்ளையர்கள் – தீரன் பாணியில் நடந்த திருட்டு!

நாமக்கலில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ரூ.2.5 லட்சத்தை எரித்த வட மாநில கொள்ளையர்களை போலீசார் வாகன சோதனையின் போது பிடித்தனர்.
நாமக்கல் அருகே பாச்சலில் பாவை கல்வி நிறுவனம வளாகத்தில் யூனியன் வங்கி ஏடிஎம் உள்ளது. தற்போது ஊரடங்கினால் கல்லூரி மூடப்பட்டிருப்பதால் இந்த ஏடிஎம் ஆள் நடமாட்டமின்றி இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜூலை 5-ம் தேதி ஏடிஎம்மிற்குள் வெல்டிங் மிஷினுடன் புகுந்து, இயந்திரத்தை இரண்டாக பிளக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது வெல்டினால் ஏற்பட்ட தீப்பொறி பட்டு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் பணம் மொத்தமும் எரிந்து சாம்பலானது. இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சேலம் – நாமக்கல் செல்லும் வெளிமாநில கண்டெய்னர் லாரியை நிறுத்த சொல்லினர். இதனை பார்த்த ஓட்டுநர் உட்பட லாரியிலிருந்த மூவர், சற்று தூரத்திலேயே லாரியை ஓரங்கட்டிவிட்டு இறங்கி தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சைகுல், முகமது சராபத், முகமது ஜினீத் என்பது தெரிய வந்தது.

வட மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வரும் அவர்கள் கூடவே வெல்டிங் மிஷினை எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். சரக்கை இறக்கிவிட்டு வட மாநிலம் திரும்பும் வழியில் ஆள் அரவம் இல்லாத ஏடிஎம் தென்பட்டால் வெல்டிங் மிஷினை கொண்டு ஏடிஎம்மை உடைத்து பணத்தை லவட்டி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு தான் பாச்சல் ஏடிஎம்மிலும் கைவரிசை காட்ட நினைத்து ரூ.2.5 லட்சத்தை கொளுத்தியுள்ளனர். தொழிலாளர்கள் என்ற போர்வையில் நுழைந்து தீரன் பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.