வாகன விபத்தில் பலியான வேட்பாளர்.. தேர்தலில் அபார வெற்றி!!

கேரளத்தில் வாகன விபத்தில் பலியான இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலக்காடு கிராம பஞ்சாயத்தின் 15-வது வார்டில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்டார் சஹீரா பானு. அவர் தனது பகுதியிலுள்ள வாக்காளர்களிடம் தேர்தல் சீட்டுகளைக் கொடுப்பதற்காக மகனுடன் அமர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காரில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, சஹீரா பானுவுக்கு மலப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.இந்த நிலையில், கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளரைக் காட்டிலும் 248 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சஹீரா பானு வெற்றி பெற்றுள்ளார்.
இதுபற்றி திரூர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஹம்சகுட்டி தெரிவித்தது: “அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் 2 அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த வார்டில் மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கலாம்”.
சஹீரா பானு முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார் சஹீரா பானு.