“சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை தான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்” – தமிமுன் அன்சாரி எச்சரிக்கை

பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
ஈரோட்டில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் அடுத்த மாதம் நடைபெறும் தலைமை நிர்வாக குழுவில் முடிவு எடுக்கப்படும்.
7 பேர் விடுதலை குறித்து கவர்னர் மவுனம் காக்க கூடாது. உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வட மாநிலங்கள் போல் தமிழகத்தில் பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்ற வழியில் உள்ள பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும்.
ரஜினி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.அவர் மிக அமைதியை விரும்பக் கூடியவர். அரசியல் மிக பரபரப்பான ஒன்று.அவர் அரசியலுக்கு வரமாட்டார் என நான் நம்புகிறேன். நாங்கள் ஏற்கனவே அதிமுக – பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம். அ.தி.மு.க.வை நினைத்து கவலைப்படுகிறோம்.
தமிழக அரசு நீட் தேர்வில் தேர்வான மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதனை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். வேல் யாத்திரை குறித்து கருத்து கூற விரும்ப வில்லை.
உதயநிதி ஸ்டாலின் அரசியல் நோக்கத்திற்காக கைது செய்தது தவறு. மதம் மற்றும் சாதி ரீதியாக செல்வதை தடை செய்ய வேண்டும். அரசியல் நோக்கதற்காக செல்வதை தடை செய்ய கூடாது.