3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து உலக சாதனை படைத்த கேரள மாணவி!

ஊரடங்கு காலகட்டத்தில் 90 நாட்களில் 350 ஆன்லைன் படிப்புகளைப் படித்து கேரள கல்லூரி மாணவி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆரத்தி ரெகுநாத்(22). இவர் எம்இஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வகுப்புகள் இல்லாததால், ஆன்லைன் பாடங்கள் படிக்க துவங்கிய ஆரத்தி 3 மாதங்களில் 350 பாடங்கள் படித்துள்ளார். இதை யுனிவர்சல் ரெக்கார்ட்ஃபோரம்-லில் ஏராளமான ஆன்லைன் பாடங்கள் படித்த நபர் என்ற சாதனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அவர் இந்த கொரோனா காலத்தில், ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம், டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வர்ஜீனியா பல்கலைக்கழகம், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம், வர்ஜீனியா பல்கலைகழகம், நியூயார்க் மாநில பல்கலைகழகம், எமோரி பல்கலைகழகம், கோசெரா திட்ட நெட்வொர்க் பல்கலைகழகங்களில் படித்துள்ளார்.
இதுகுறித்து ஆரத்தி கூறும்போது, ”ஆன்லைனில் பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. இந்த உலகத்தை எனது கல்லூரி ஆசிரியர்கள்தான் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு ஆன்லைன் படிப்பும் பாடத்திட்டத்திலும், கால அளவிலும் வேறுபடும். ஆசிரியர்களும், பெற்றோரும் அளித்த ஊக்கத்தால் குறைந்த காலகட்டத்தில் இதை என்னால் சாதிக்க முடிந்தது.
ஜூன் இறுதியில் படிக்க துவங்கினேன். கல்லூரியில் படிக்கும் பாடம் தொடர்பான பாடங்கள் படிக்க துவங்கிய நான், பின் மற்ற பாடங்களை படிக்க துவங்கினேன். ஒவ்வொரு பாடமாக படிக்கும் போது ஆர்வம் அதிகமானது. முதலில் ஆசிய சாதனையில் சேர்க்கப்பட்டது. தற்போது உலக சாதனையில் சேர்க்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.