ஈ -பாஸ் விவகாரம் ஸ்டாலின் காட்டம்….
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொருளாதார சமூகப் பின்னடைவுகளைக் கருதி, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இ-பாஸ் முறையை மட்டும் தொடர்ந்து நீட்டித்து, மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வருவது மனிதநேயமற்ற செயல். ஊரடங்கால் ஏறக்குறைய ஐந்தாவது மாதமாக, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட போக முடியாமல், மக்கள் அல்லல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதை முதலமைச்சர் பார்த்து கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை படுதோல்வி அடைந்துவிட்டது. பத்து முறை விண்ணப்பித்தாலும், நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை.
அமைப்புச்சாரா தொழிலாளர்களோ, தனியார் நிறுவன ஊழியர்களோ, சிறு வணிகர்களோ, சென்னையிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் சொந்த ஊருக்குப் போன மக்களோ திரும்பிச் செல்ல முடியவில்லை. தாய்-தந்தையர், உற்றார்-உறவினர்கள், உயிர் நண்பர்களின் இறுதிச் சடங்கில் கூட கலந்துக்கொள்ள முடியாத துயரமான சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இ-பாஸ் வழங்குவதில் துவக்கத்திலிருந்தே, ஊழல் தாராளமாகவும், தொடர்ச்சியாகவும் அரங்கேறி வருகிறது. மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறைக் கட்டாயம் இல்லை என்று அறிவித்த பிறகு அ.தி.மு.க. அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து உள்நோக்கத்துடன் வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதலமைச்சர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? மக்களின் உணர்வுகளை மதித்து, மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.