விவரம் தெரிந்து அறிக்கை விடுங்கள் – வைகோவுக்கு மின் ஊழியர்கள் கண்டனம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு தேர்வானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க கோரிய வைகோவின் அறிக்கைக்கு மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 12,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் உள்ள கேங்மேன் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த பணி நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சனிக்கிழமை அறிக்கை வெளியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேங்மேன் பணிக்கு புதிதாக தேர்வெழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட 5000 நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள இந்த கருத்து கண்டனத்துக்கு உரியது. முழு விவரங்கள் தெரிந்து அறிக்கை விடும்படி கேட்டுக்கொள்கிறோம் என மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.