“ஊரடங்கு ஒரு சட்டக் கேலிக்கூத்து” தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த முக.ஸ்டாலின்!!
கொரோனாவில் நாடு முழுவதும் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழக அரசின் இபாஸ் கட்டாயம், பொது போக்குவரத்துக்கு தடை போன்ற காரணங்களால் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட நிலையில், இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசை தமிழக மக்கள் இனியும் நம்ப வேண்டாம். கடந்த 7 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறையாமல் கூடிக்கொண்டு போவதால், ஊரடங்குச் சட்டங்களைக் கூட ஒழுங்காக அமல்படுத்தத் தெரியாத, தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
“பள்ளி, கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து, கோவில்கள் தவிர எல்லாம் செயல்பட அனுமதித்துவிட்டு, இதனை ஊரடங்கு என்று சொல்வதைப் போல இந்த ஊரடங்கைக் கண்துடைப்பு நாடகமாகவே மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் “கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு ஒன்றுதான் உயிர்ப் பாதுகாப்புக்கான ஒரே வழி” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.