வெட்டிக் கொல்லப்பட்ட கோயில் பூசாரி – எலி கடித்துவிட்டதாக கூறிய மகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் பூசாரி வீட்டில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது மகளும், மனைவியும் எலி கடித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே வடவம்பாளையத்தை சேர்ந்தவர், தனசேகரன் (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (42). இவர்களுக்கு சத்யா எனும் 20 வயது மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த தனசேகரன், அதிகாலை 2 மணியளவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தனசேகரன் மகள் சத்யா, தந்தையை எலி கடித்து ரத்தம் வருவதாகவும், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவுமாறும், அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.சத்தியா வீட்டிற்கு மக்கள் வந்து பார்த்தபோது, தனசேகரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 108 ஆம்புலன்சிற்கு போன் செய்து தந்தையை பூனை கடித்துவிட்டதாக மாற்றி மாற்றி கூறியுள்ளார்.

தகவலறிந்து வந்த வளவனூர் போலீசார் தனசேகரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு மனைவி மற்றும் மகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தனசேகரனுக்கும் மனைவி ராஜேஸ்வரிக்கும் 3 ஆண்டுகளாக குடும்ப பிரச்னை இருந்துள்ளது. தனியாக வசித்த மனைவியை உடன் வாழ கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தால் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.