பாஜக பிரமுகருக்கு சொந்த கட்சியினரே விடுத்த கொலை மிரட்டல்! காரைக்காலில் பரபரப்பு!

காரைக்காலில் சுரக்குடி பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகரான சந்திர மௌலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ஜ.க கட்சியின் புதுச்சேரி தலைவர் சுவாமிநாதன் மற்றும் காரைக்கால் மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி உள்ளிட்டோர் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சந்திர மௌலி வீட்டிற்கு கட்டை, கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்ற சிலர் அவரை கொலை வெறியுடன் தாக்க முயற்சித்துள்ளனர். வீட்டு
கதவும் உடைக்கப்பட்டுள்ளது. எனவே, தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கேட்டு திருநள்ளாறு காவல் நிலையத்தில் சந்திர மௌலி தஞ்சமடைந்தார்.
இதை தொடர்ந்து, சமூக ஆர்வலர் சந்திர மௌலிக்கு எதிராக திருநள்ளாறு காவல் நிலையத்தில் கூடிய பாரதிய ஜனதா கட்சியினர், சந்திர மௌலி சாதி பற்றி பேசியதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி காவல் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இருதரப்பினரின் புகார்களை பெற்றுக்கொண்ட திருநள்ளாறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அதே கட்சியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.