“ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை எடுங்க” வைகோ வேண்டுகோள்!

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை விரைந்து தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன், விக்னேஷ் ராமு ஆகிய மாணவர்கள் மருத்துவம் பயின்று வந்தனர்.

கடந்த வார இறுதியில், 9-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, வார விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க வோல்கா நதிக்குச் சென்ற மாணவர்கள் நான்கு பேரும், எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டிய மாணவர்களின் எதிர்பாராத உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்து போன நான்கு தமிழக மாணவர்களின் உடல்களையும் விரைந்து தமிழகம் கொண்டுவர, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன்.

பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்று, தங்களின் பிள்ளைகளை சிறந்த மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என்றக் கனவோடு வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்க அனுப்பி வைத்த பெற்றோர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிற வகையில், தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x