ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் பாஜகவின் திட்டத்தை தாங்குமா காங்கிரஸ்?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு சுயேட்சைகள், கூட்டணி கட்சிகள் என 107 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் அசோக் கெலாட் அரசில் ஒற்றுமையாக இணைந்திருப்பதால், காங்கிரஸ் கட்சியின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்துள்ளது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த காங்.எம்எல்ஏக்கள்  கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் நேற்று பங்கேற்க வந்திருந்தார். “சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தியுடன் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் இருந்தாலும், மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து அரசைக் காக்க வேண்டும்” என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவுரை கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும், அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே பாஜக சார்பில் நேற்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில் பல்வேறு வேறுபாடுகள், குழப்பங்கள் இருக்கின்றன.

ஆதலால், அந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. கரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளாதது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை எழுப்பவும் பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 6 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்த கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் எந்தவிதமான உத்தரவையும், சபாநாயகர் உத்தரவுக்கு எதிராகப் பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதனால், அசோக் கெலாட் அரசுக்கான பலம் அதிகரித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x