ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி!!!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றுள்ளது.
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் கடந்தாண்டு பதவியேற்ற நிலையில் அவருக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் அவ்வப்போது பூசல் இருந்துவந்தது. இதன் உச்ச கட்டமாக தனக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் உதவியுடன் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். சச்சின் பைலட்டை பாஜக பின்னிருந்து இயக்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
இதைத் தொடர்ந்து பேரவையை கூட்டக் கோரி ஆளுநர் மளிகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணா நடத்தியது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, குதிரை பேரத்தை தடுக்க இரு தரப்பும் எம்எல்ஏக்களை பாதுகாத்து வைத்தது என அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் ராஜஸ்தானில் அரங்கேறின. முடிவில் சச்சின் பைலட்டை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்ததை அடுத்து அரசுக்கு எதிரான போக்கை அவர் கை விட்டு முதல்வர் அசோக் கெலாட்டுடன் மீண்டும் இணைந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக அரசியல் களம் பரபரப்பாக இருந்த நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் அதிக உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் வெற்றிபெற்றதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறும் முன் பேசிய முதல்வர் அசோக் கெலாட், தங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக எவ்வளவு முறை முயன்றாலும் அது ஒரு போதும் நிறைவேறாது என தெரிவித்தார். பின்னர் பேசிய சச்சின் பைலட், ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் போட்ட திட்டத்தை தாங்கள் முறியடித்துவிட்டதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைமை மீது தான் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தான் கூறிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றிபெற்றதால் ராஜஸ்தான் அரசியல் பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.