“சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்த பிரதமரின் கருத்து முரண்பாடானது” காங்கிரஸ் தலைவர் அகமது படேல்!!
சீனாவுடனான லடாக் விவகாரத்தில் பிரதமர் மோடி ஒன்று சொன்னால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வேறொன்றைக் கூறுகிறார் இருவரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் அகமது படேல் விமர்சனம் செய்தார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், எல்லையில் இந்திய இறையாண்மைக்கு சவால் விடுத்தவர்களுக்கு நம் ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர் என்றார்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் அகமது படேல் பிரதமரின் கருத்து குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர், ‘சீனாவுக்கு பதிலடி கொடுத்தோம் என்று வாய் வார்த்தையில் சொன்னால் போதாது. பதிலடி கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. பிரதமர் சொல்வதை நாம் நம்பியாக வேண்டும். ஆனால் உண்மை என்னவென்பது அவருக்கும், அரசுக்குத்தான் தெரியும். உண்மை நிலை நல்லபடியாக இல்லை. சீன ராணுவத்தினர் நம் எல்லைக்குள் ஊடுருவினர் என்று ராஜ்நாத் சிங் ஒன்று சொல்கிறார் என்றால் பிரதமர் வேறொன்று சொல்கிறார்.”
“எதிர்க்கட்சியினரை நம்ப வேண்டும். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்றாலும் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? இப்படி முன்னாலும் நடந்துள்ளது. நடவடிக்கையை ராஜாங்க ரீதியாக, பொருளாதார ரீதியாக எடுக்க வேண்டும். நம் பகுதிக்குள் ஊடுருவினால் அவர்களை பின்னுக்குத் தள்ள வேண்டும்’ என்று அகமது படேல் கூறியுள்ளார்.