“வங்கி கடன்தாரர்களை பணம் காய்க்கும் மரமாக கருத வேண்டாம்!” – ராமதாஸ் வேண்டுகோள்!

வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டி மற்றும் வட்டி மீதான வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்வது குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக மத்திய அரசின் பதில் மனுவை மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என்றும் கொரோனாவால் எந்தெந்த துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த கால அவகாசத்தை வழங்குவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது, அப்போது வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கிக்கடன் வட்டி தள்ளுபடி மறுப்பு ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடன்தாரர்களை பணம் காய்க்கும் மரமாக கருதாமல் அவர்களிடம் கருணை காட்ட வேண்டும். வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதியளித்தவாறு வட்டியை தள்ளுபடி செய்யும் நல்ல முடிவை எடுத்து தீர்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.