பாலம் கட்டியதில் ஊழல் செய்த அமைச்சர்… கைதுக்கு பயந்து மருத்துவமனையில் அனுமதி!!

கேரள முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் இப்ராகிம் குஞ்சுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் கடந்த 2011 – 2016ல் உம்மன்சாண்டி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் இப்ராகிம் குஞ்சு. இவர் தற்போது களமேசரி தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏ.வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது கொச்சி பாலாரி வட்டத்தில் ₹39 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைய இடது முன்னணி அரசு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில், பாலம் கட்டிய நிறுவனத்துக்கு அமைச்சர் இப்ராகிம் குஞ்சு உத்தரவின் பேரில் முன்கூட்டியே பணம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீதும், அப்போதைய பொதுப்பணித்துறை செயலாளர் சூரஜ் உட்பட அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இப்ராகிம் குஞ்சு தவிர அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள இப்ராகிம் குஞ்சு வீட்டுக்கு சென்றனர். அப்ேபாது அவர் கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டதால், அவர் மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனைக்கு சென்று போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். ஆனால், அவருக்கு மருத்துமனையில் தொடர் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் தொடுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி ஜோபின் செபஸ்டியன் மருத்துமனைக்கு சென்று, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்டார்.
மருத்துமனையில் அவருக்கு நீதிமன்ற காவலில் சிகிச்சை அளிக்கப்படும். இப்ராகிம் குஞ்சுவை காவலில் ஏடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே இப்ராகிம் குஞ்சு தரப்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கேரளாவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.