“மக்களவை பொதுத்தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்” என பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்வீட்!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானும் ஆன மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். கடந்த ஓராண்டாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த அவர், திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கிரிக்கெட் பயணத்தை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு தங்கள் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் ஓய்வு அறிவிப்பு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘தோனி, கிரிக்கெட்டில் இருந்து மட்டும்தான் ஓய்வு பெற்றுள்ளார், மற்றவைகளில் இருந்து அல்ல. அவரது திறமையை பயன்படுத்தி முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிரூபித்த எழுச்சியூட்டும் தலைமை பொது வாழ்க்கையிலும் தேவை. 2024ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.