“தேசத்தின் பொருளாதாரத்தை மோடி அரசு படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது!” ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா வைரஸைத் தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, வேலையின்மை ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானபின், மத்திய அரசை விமர்சிப்பதை தொடர்ச்சியாக கொண்டுள்ள ராகுல் காந்தி பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவை என்ற தலைப்பில் இதுவரை 4 வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் “கொரோனாவுக்கு எதிராக இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் திட்டமிட்டு போர் புரிந்து வருகிறத” எனப் பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸுக்கு எதிராக மோடி அரசு நன்கு திட்டமிட்டு போர் புரிந்து, தேசத்தின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு 24 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி, 12 கோடி வேலையிழப்புகள், 5 லட்சம் கோடி கூடுதல் வாராக்கடன், உலகிலேயே அதிகமாக நாள்தோறும் கொரோனாவில் பாதிக்கப்படுவோர், இறப்போர் எண்ணிக்கையில் இந்தியா தான் இருக்கிறது. ஆனால், மத்தியஅரசும், ஊடகங்களும் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கின்றன.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.