எஸ்.வி.சேகரை வரும் 14ம் தேதி வரை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் எஸ் வி சேகரை செப்டம்பர். 14 ம்தேதி வரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. மேலும், தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியும், தேசியக் கொடியை அவமதித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக பிரமுகரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசிய கொடியை மத அடையத்துடன் ஒப்பிட்டு பேசி அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி சேகர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மன்னிப்பு கோரினால் எஸ்.வி சேகரை கைது செய்ய மாட்டோம் என போலீசார் தரப்பில் கூறியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, தேசியக் கொடியை அவமதித்த புகாரில் வருத்தம் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் மனு தாக்கல் செய்தார். எதிர்காலத்தில் தேசிய கொடியை அவமதிக்க மாட்டேன் என்றும் அந்த மனுவில் எஸ்.வி.சேகர் உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், தேசிய கொடியை அவமதித்த தொடர்பான வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்பதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கு வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்று இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.