முதன்முறையாக மெய்நிகர் முறையில் நடைபெறும் ஐ.நா., பொதுக்கூட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புமிக்க 75-வது ஆண்டு பொதுக்கூட்டம், கொரோனா வைரஸ் காரணமாக, முதன்முறையாக மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாக சொல்லிக்கொள்ளப்பட்டது.
அதன் 75-வது ஆண்டு பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் இக்கூட்டத்தில், 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் என ஆயிரக்கணக்கானோர் விவாதத்தில் பங்கேற்பார்கள்.
ஆனால் இம்முறை, கொரோனா வைரஸ் பிரச்சனை உள்ளதால், ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு உலக தலைவர்களால் வர முடியாது. இதனால் உறுப்பு நாடுகள் தங்கள் அரசாங்கங்கள் அல்லது தலைவர்களின் உரையை முன்னரே பதிவு செய்து அளிக்கும்படியும், அவை விவாதத்தின் போது பொதுக்கூட்ட அரங்கில் ஒளிபரப்பப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் வரலாற்றில், மெய்நிகர் முறையில் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.