ஐபோன் தொழிற்சாலை அடித்து உடைப்பு!! 125 ஊழியர்கள் கைது..

பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது கூறப்பட்ட ஊதியம் வழங்காமல், கடந்த 7 மாதங்களாக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் பணி முடிந்து வெளியே வந்த ஊழியர்கள் தொழிற்சாலையின் கண்ணாடி கதவுகள், மேஜை, நாற்காலி, கணினி, சிசிடிவி கேமரா, வாகனங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி, தீ வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நரசாப்புரா போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய 125 ஊழியர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பணி இடத்தில் வன்முறையில் ஈடுபட்டது, அலுவலக சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் இந்தத்தாக்குதலில் தொடர்புடையவர் களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக துணைமுதல்வரும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான அஷ்வத் நாராயணா நேற்றுவிஸ்ட்ரான் ஐபோன் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார்.
இதையடுத்து அஷ்வத் நாராயணா கூறும்போது, “இத்தகைய வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஐபோன் தொழிற்சாலையை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் முதலில் அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். ஊதிய விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.