அமெரிக்காவில் வைரஸ் தாக்கம் குறைய 2024 ஆகுமாம்.. ஆனா சீனா…?

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரும் நவம்பர் 3ம் தேதி அமெரிக்கா, அதிபர் தேர்தலை சந்திக்க உள்ளது. கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் வைரஸ் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 2024ம் வருடம் வரை ஆனாலும் ஆகலாம் என கூறப்படுகிறது.
உலக அளவில் கொரோனாவில் இருந்து 2020ம் ஆண்டிலேயே முழுவதுமாக மீண்ட நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் கொரோனாவிலிருந்து சீனா வெளியே வந்து உள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை சேர்ந்த லேரி இன்ஸ்டிடியூட் ஏசியா பவர் இன்டெக்ஸ் என்ற நிறுவனம் 26 நாடுகளின் பொருளாதார நிலைமையை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில் கொரோனா சரியாக கையாளப்படவில்லை என எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி தேர்தலை முன்னிட்டு குற்றஞ்சாட்டி வந்தது. தற்போது கணக்கெடுப்பு நடத்திய இந்த நிறுவனமும் இந்தக் கருத்தையே கூறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க சரியான முறையில் கட்டுப்படுத்த தவறியது, சர்வதேச பொருளாதார ஒப்பந்தத்தை சரியாக பின்பற்றாதது ஆகியவை அமெரிக்காவின் பின்னடைவுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
ஆனால் சீனாவில் சரியாக சமூக விதிமுறைகளை பின்பற்றி பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. ஆசிய நாடுகளிலேயே கொரோனாவை சரியாக கட்டுப்படுத்தி விரைவில் அதிலிருந்து மீண்ட நாடு என்றால் அது சீனாதான்” என இந்த அமைப்பு தகவல் அளித்துள்ளது.