காதலியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த காதலன்.. காதலி கொடுத்த ஷாக்!!

சேலம் மரவனேரி பிள்ளையார் நகரைச் சேர்ந்தவர் 30 வயதான இந்து பிரியா. 10ஆம் வகுப்பு முடித்த இவர், தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்த ஊராட்சி துணை செயலாளர் ராஜ் என்பவரின் மகன் 30 வயதான கலைச்செல்வன். மெக்கானிக்கல் பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கலைச்செல்வன் சூப்பர் மார்கெட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் இந்து பிரியா, இருமுறை கருவுற்றுள்ளார். இருமுறையும் கருவைக் கலைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கலைச்செல்வன் தனது செல்போன் எண்ணை மாற்றிக் கொண்டு சேலத்தில் இருந்து கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்று விட்டார். இதற்கிடையே, கலைச்செல்வனுக்கு வேறொரு பெண்ணுடன் திங்கட்கிழமை சேலம் ஓமலூரில் திருமணம் நடக்க இருந்தது.
இதையறிந்த இந்து பிரியா, ஞாயிற்றுக்கிழமை கலைச்செல்வனை சந்தித்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து வி்ட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஞாயிறு காலை 11 மணியளவில் சேலம் அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் இந்து பிரியா புகாரளித்தார்.புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்தனர்.
இந்து பிரியா ஞாயிறு காலை முதல் இரவு 11 மணிவரை காவல்நிலையத்தில் காத்துக்கிடந்து போராடிய நிலையில், கலைச்செல்வன் மீது, ஆபாசமாக திட்டியது, ஏமாற்றியது ஆகிய இரு பிரிவுகளி்ன் கீழ் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகத் தகவல் தெரிவித்ததை அடுத்து இந்துபிரியா, வீட்டிற்கு சென்றார்.