சிக்னல் செயலியால் ரூ.17 ஆயிரம் கோடி குவித்த நிறுவனம்!

வாட்ஸப்பின் பிரைவசி கொள்கைகள் மாற்றப்பட்டதால் கோபமடைந்த பயனர்கள் சிக்னல் செயலி மற்றும் டெலிகிராம் செயலிக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சிக்னல் செயலிக்கு சம்பந்தமே இல்லாத சிக்னல் அட்வான்ஸ் (SIGL) என்ற நிறுவனத்தின் பங்குகள் 20 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளன. 

சிக்னல் செயலி முழுக்க முழுக்க நன்கொடையாக தரப்படும் நிதியை கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். வாட்ஸப்பின் துணை தலைவர் தங்கள் நிறுவனத்தை பேஸ்புக்கிற்கு விற்றார். அதற்கு பிறகு கணிசமான பணத்தை சிக்னல் அறக்கட்டளைக்கு தந்தார். மேலும் பலர் தந்த நிதியால் லாப நோக்கமின்றி தற்போதைக்கு இயங்குகிறது. இதனால் இதில் பயனர்களின் தகவல்கள் அதிகம் பெறப்படுவதில்லை. 

இந்த நிலையில் வாட்ஸப் செயலிக்கு மாற்றாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் இந்த செயலியை பரிந்துரைத்தார். அதில் இருந்து இது உலகம் முழுக்க பல கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு தற்போது வாட்ஸப்பையே பின்னுக்கு தள்ளி அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்திருக்கிறது. டெக்ஸாசில் சிக்னல் அட்வான்ஸ்ட் என்ற பெயரில் இயங்கி வந்த வேறொரு உப்புமா கம்பெனிக்கு பங்குசந்தையை பிய்த்துக்கொண்டு கொட்டியிருக்கிறது அதிர்ஷ்டம். பொறியியல் தயாரிப்புகள், அது தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனத்தை சிக்னல் செயலியின் நிறுவனம் என்று அமெரிக்கர்கள் கருத தொடங்கிவிட்டனர். 

அந்த பங்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். 2015-ல் இருந்து கிணற்றில் போட்ட கல்லாக இருந்தன அந்நிறுவன பங்குகள். ஜன., 7-ம் தேதி முன்பு வரை இந்திய மதிப்பில் ரூ.42-க்கு வர்த்தகம் ஆகின. அதன் பிறகு சிக்னல் செயலியுடன் முடிச்சுப்போட்டு செய்திகள் பரப்பப்பட்டதால் ஜெட் வேகத்தில் உயர்ந்தன பங்குகள். ஜன., 8 வர்த்தக நேர முடிவில் ரூ.510 ஆக உயர்ந்தது. 

2 நாள் விடுமுறைக்கு பின் திங்களன்று அமெரிக்க பங்கு சந்தைகள் துவங்கின. மிகப்பெரும் உச்சமாக சிக்னல் அட்வான்ஸ் நிறுவன பங்குகள் 1,900 ரூபாயை தாண்டியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேல் எகிறியுள்ளது. இது போன்று ஏற்கனவே சில நிறுவனங்களுக்கும் அதிர்ஷ்ட காற்று வீசியுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x