பா.ஜ.க வலையில் சச்சின் பைலட்; சிவசேனா கடும் விமர்சனம்

பா.ஜ.கவின் சதிவலை திட்டத்தில்,ஜோதிராதித்ய சிந்தியா விழுந்தது போல, ராஜஸ்தானில் சச்சின் பைலட் விழுந்துள்ளார் என சிவசேனா விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது: நாடு ஒருபுறம் கொரோனா வைரசில் இருந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பாஜ.க அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் கமல்நாத் அரசை கவிழ்த்தது, தற்போது ராஜஸ்தானில் கவிழ்க்க முயற்சிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் சிந்தியா 22 எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.கவில் இணைந்தார். இதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி பரிசளிக்கப்பட்டது. அவருக்கு இனிமேல் அமைச்சர் பதவியும் உறுதியாக கிடைக்கும். மத்தியப் பிரதேசத்தில் இவ்வாறு நடக்கும் போதே ராஜஸ்தானிலும் அதேபோன்று நிகழும் என பலரும் கணித்து விட்டனர். துணை முதல்வர் சச்சின் பைலட்டும் சிந்தியாவின் பாதையில் செல்வார் எனக் கணித்தது, உண்மையாகி வருகிறது.

சச்சின் பைலட் தற்போது 30 எம்.எல்.ஏ.க்களுடன் கெஹ்லாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். ராஜஸ்தானில் சட்டசபையின் 200 இடங்களில் காங்கிரஸ் 108 இடங்களுடன் உள்ளது. பா.ஜ.க தரப்பில் வெறும் 72 இடங்கள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் மைனாரிட்டியாக இருப்பதாக சச்சின் சொல்கிறார். எம்.எல்.ஏ.,க்களை முறைப்படி எண்ணி சாதக நிலையை உறுதி செய்யாமல் பாஜ.க வெளிப்படையாக எதையும் செய்யாது. இப்போதைக்கு திரைமறைவு வேலைகளைச் செய்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை ஆபரேஷன் லோட்டஸ், திட்டத்துக்காக நியமித்தது. இப்போது அந்த வலையில் சச்சின் பைலட்டும் விழுந்துள்ளார். சச்சினுக்கு முதல்வர் பதவி ஆசை உள்ளது. கட்சி பிரச்னையில் இருக்கும்போது சச்சின் பைலட் இப்படி நடந்து கொள்வது தவறு; அது அவருக்கே ஆபத்தாக முடியும்.

சச்சினின் அராஜகமும் பதவி ஆசையும் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பார்க்கிறது. இதனை மத்தியில் ஆளும் பா.ஜ.க உதவி இல்லாமல் அவர் செய்ய முடியாது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது.

மத்திய அரசும் ஃபார்முலாவை ஒர்க் அவுட் செய்து கவிழ்ப்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் ஊடுருவல், கொரோனா பரவல் அதிகரிப்பு என எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக, காங்கிரசின் உள்விவகாரத்தில் தலையிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் பாலைவனத்தில் பா.ஜ.க. ஆடும் ஆட்டத்தால், ஜனநாயகம் பாலைவனமாக மாறப்போகிறது.

என்று சிவசேனாவின் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x