சாத்தான்குளம் காக்கி கும்பல் கூண்டோடு கைது; தப்பியோடிய இன்ஸ்பெக்டருக்கும் காப்பு!

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி அவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது போல் எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள், ஏஎஸ்பி, டிஎஸ்பி, எஸ்பி என அனைவர் மீது சஸ்பெண்ட் அல்லது காத்திருப்பு பட்டியலில் வைப்பது என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அதிரடியாக, சி.பி.சி.ஐ.டி போலீசார், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவரும் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்பது பெருவாரியானோரின் கோரிக்கையாக இருந்தது. ஒரு காவல் நிலையத்தில் இதுபோன்ற சித்ரவதை நடந்ததை, இன்ஸ்பெக்டர் தடுக்கவில்லை; அதனால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஸ்ரீதர், கங்கைகொண்டானிலிருந்து தப்பிச் செல்லும் வழியில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழிமறித்தனர். பின்னர் ஸ்ரீதரை தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சாத்தான்குளம் காவல் நிலைய அலுவலர் என்ற முறையில் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.