கோவை கோயில் சேதம் தொடர்பில் ஒருவன் கைது… மர்மங்கள் வெளிவருமா?

சில தினங்களுக்கு முன், கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு மாகாளியம்மன் கோயிலின் வாசல் மேற்கூரை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதேபோல், கோவை ரயில்நிலையம் விநாயகர் கோயில்நல்லாபாளையம் செல்வ விநாயகர் கோயில் ஆகியவையும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் தனிப்படை போலீசாரால், சேலம் பள்ளப்பட்டியில் வைத்து கஜேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை தனிப்படைப் போலீசார் கோயம்புத்தூர் அழைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மாநகர காவல் ஆணையாளர், “கோவை கோயில் அருகே டயரை தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பாக கஜேந்திரன் என்பவரை (வயது 48) இன்று கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு படையினர் பிடித்தனர். இவர் எந்த அமைப்போ கட்சியோ சாராதவர்” என்று பதிவிட்டுள்ளார்.
பிடிப்பட்டவர், குடும்ப பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்ததாகவும், அதனால் தீ வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பிடிபட்ட நபர், எந்த அமைப்போ கட்சியோ சாராதவர் என்று ஏன் மாநகர காவல் ஆணையாளர் இவ்வளவு அவரசமாக கூற வேண்டும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. பிடிபட்ட கஜேந்திரனை தீர விசாரித்தால், அவன் பின்னணியில் உள்ள அமைப்பு, அதன் நோக்கங்கள் குறித்த மர்மங்கள் வெளிவரும் என்று கருதப்படுகிறது.
தமிழகத்தில் கோயில்களை சேதப்படுத்தி மத மோதல்களைத் தூண்ட சதிகள் நடைபெறுகின்றன என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.