ஐ.பி.எஸ் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை; ஆண் நண்பர்கள் கைது!!

ஐ.பி.எஸ் அதிகாரியும் கர்நாடக சி.ஐ.டி டி.எஸ்.பியுமான லட்சுமி நண்பரின் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குருபாலஹட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கே.ஏ.எஸ் அதிகாரியான இவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் லட்சுமி (32). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் 2014ம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். இவருடன் கல்லூரியில் படித்தவர் நவீன். இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகரில் வசித்து வந்தனர். தற்போது சி.ஐ.டி பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த லட்சுமி நாகர்பாவி மெயின் ரோடு விநாயகா லே அவுட் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் நேற்று மதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பிரஜ்வல், மனோ என்ற மனோகர் உள்பட 5 பேர் இவருடன் விருந்தில் கலந்து கொண்டனர். அனைவரும் மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்குள் சகஜமாக பேசி கொண்டிருந்தபோது, திடீரென்று இருக்கையில் இருந்து மாடிக்கு சென்ற லட்சுமி, கதவை அடைத்து கொண்டார்.
வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கிருந்த ஜன்னல் கம்பியில் லட்சுமி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக லட்சுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நண்பர் மனோகர் மற்றும் பிரஜ்வல் உள்பட 4 பேரை அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.