ஆக., 3-ல் மாணவர் சேர்க்கை கிடையாது: பள்ளிக் கல்வித்துறை மறுப்பு

ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என செய்தி வெளியான நிலையில், அது தவறான தகவல் என பள்ளிக் கல்வித்துறை கூறி உள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.
ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்ததாக ஒரு தகவல் இன்று பிற்பகல் வெளியானது.
இது குறித்து தற்போது பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து வெளியான தகவல் தவறானது. மாணவர் சேர்க்கை தொடர்பாக, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கை தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியுள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.