“ஓய்வை அறிவித்த பிறகு நானும், தோனியும் கட்டியணைத்து அழுதோம்!” சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி!!
இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தன்று, கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் ஓய்வு தொடர்பாக அறிவித்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் ரெய்னாவின் அதிகாரப்பூர்வ ஓய்வு, ஆகஸ்ட் 16ம் தேதி என பிசிசிஐ உறுதிப்படுத்தியது. இருவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஓய்வு குறித்து அறிவித்த பிறகு, இருவரும் கட்டியணைத்து அதிகம் அழுததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதன்பிறகு சிஎஸ்கே நண்பர்களுடன் இணைந்து அந்த நாளை கொண்டாடியதாகவும், கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் அவர்களது உறவு குறித்து நிறைய பேசியதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘தோனி ஓய்வை அறிவிக்க போகிறார் என்பது எனக்கு சென்னை வந்தவுடன் தெரியும். அதனால் நான் தயாராக இருந்தேன். எங்கள் ஓய்வை அறிவித்த பிறகு இருவரும் கட்டியணைத்து அழுதோம். அதன்பிறகு நான், பியூஷ், அம்பத்தி ராயுடு, ஜாதவ் ஆகியோர் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து நிறைய பேசிக் கொண்டிருந்தோம்’ என்றார்.