பழம்பெரும் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்

80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழக்கை வாழ்ந்த ‘கிளாசிக்கல் மியூசிக் மேஸ்ட்ரோ’ என புகழப்படும் பிரபல இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார். அவருக்கு வயது 90.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்திலுள்ள பிலி மண்டோரி என்ற கிராமத்தில், 1930ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்தார். இவரது தந்தை பண்டிட் மோதிராம் மற்றும் அவரது சகோதரர்களும் இசைக் குடும்பத்தினராவர். தனது 14 வயதில் பண்டிட் ஜஸ்ராஜ் பாடல் பயிற்சியை துவங்கினார். 22 வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.
தனது இளமை பருவத்தில், இசைக் கலைஞர்களுடன் இசையைப் படிக்க குஜராத் சென்ற அவர், 1946ம் ஆண்டில், கொல்கத்தா சென்று வானொலியில் கிளாசிக்கல் இசையைப் பாடத் தொடங்கினார்.

இசையில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்த அவர், அட்லாண்டா, டொரோண்டா, நியூயார்க், மும்பை, கேரளா உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களிலும் இசைப்பள்ளியை தொடங்கினார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வீட்டில், மாரடைப்பு காரணமாக பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்.
புகழ்பெற்ற பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.