தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், தமிழக தலைவர்களின் வரவேற்பும்!
![](https://thambattam.com/storage/2020/08/sterlitr-1-780x470.jpg)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த தீர்ப்பினை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “அதிமுக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.”
திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று தமிழக முதல்வரின் தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும்! ஆலைக்காக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைத்திட வேண்டும்”
அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “நல்ல வரவேற்க தகுந்த தீர்ப்பு. ஏற்கெனவே அரசு எடுத்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவுதான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்பமுடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு”
திமுக எம்.பி. கனிமொழி, “தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.”
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஸ்டெர்லைட் ஆலை திறக்க கூடாது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!”
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்! – என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். பல ஆண்டுகளாக பல கட்ட மக்கள் போராட்டத்திற்கு பிறகு 13 பேர் உயிரை விலையாக கொடுத்து இந்த தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் அதிலும் நீதியை நிலைநாட்டுவதற்கு தேவையான சட்டப்போராட்டங்களை மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு, மக்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கான மாபெரும் வெற்றி! இந்த வழக்கைத் தொடுத்து, வழக்காடிய வழக்கறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.”
மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி: “ஸ்டெர்லைட் தீர்ப்பு – மக்கள் போராட்டத்தின் வெற்றி தமிழரசன், சண்முகம், கிளாஸ்டன், கந்தையா, மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ஜெயராமன், வெணீஸ்டா, ஸ்னோலின் உள்ளிட்ட 15 தமிழர்கள் இன்னுயிர் ஈந்து பெற்று கொடுத்த நீதி. பாஜக ஆதரவு பெற்ற பன்னாட்டு முதலாளி கும்பலுக்கு கிடைத்த பின்னடைவு”
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார், “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்ப்பை வரவேற்கிறேன்!”
பாஜகவின் சீனிவாசன் கூறுகையில், “ஸ்டெர்லைட் வந்த ஆரம்பகாலத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்திருக்கிறோம். ஆனால் இப்போது பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்”
ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் கைதான மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், “ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. வேதாந்தா குழுமத்தின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மக்களின், உலகத் தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, உயிர் நீத்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு எனவும், மக்கள் போராட்டம் நியாயமானது என்பதை தீர்ப்பு சொல்லியிருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்தே வெளியேற்ற வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்யக்கூடாது, வேதாந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும். தெளிவான வாதங்களை முறையீடுகளை செய்ய வேண்டும்,”என்றார்