ஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக ‘டிரீம்11’ தேர்வு செய்தது பிசிசிஐ!

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐ, விவோ நிறுவனம் கொண்டுள்ள டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்வதாக அறிவித்தது.
மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியது பிசிசிஐ. டாடா குழுமம், அன்அகாடமி, டிரீம் 11 ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரராக இருக்க விருப்பம் தெரிவித்து பிசிசிஐக்கு விண்ணப்பம் அளித்தன.

இந்நிலையில், ஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக ‘டிரீம்11’ நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். ரூ.222 கோடி வழங்க டிரீம் 11 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ தேர்வு செய்துள்ள டிரீம் 11 நிறுவனம் நான்கு மாதங்கள் 13 நாள்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரராகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.