சீன நிறுவனத்தை நேரிடையாக எதிர்க்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்காவில் சீனாவை சேர்ந்த ஹவாய் நிறுவனத்திற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையாக்கியுள்ளது. மேலும் அமெரிக்க தொழில்நுட்பத்திற்கான அணுகலை துண்டிப்பதன் மூலம் அதன் முக்கிய கூறுகளில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனிடையே சீனாவின் ஹவாய் நிறுவனம் அமெரிக்காவில் உளவுபார்க்கும் வேலையை பார்த்து வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
உளவு பார்ப்பதன் மூலம் எந்த பலனையும் சீனாவால் அடைய இயலாது என்றும், உளவு பார்க்கும் நிறுவனத்துடன் எதையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹவாய் நிறுவனத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தாத வகையில், அமெரிக்க வணிக விதிகளில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வாஷிங்டன்னில் ஹவாய் நிறுவனத்தின் சேவைகளுக்கு கடந்த ஆண்டு முதலே முழுமையாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.