பல எதிர்ப்புகளுக்கு பின்னும் “மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்” என மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்!!!

புதுடில்லி:
புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் சர்ச்சையையும் கேள்விகளையும் எழுப்பியது. இதில் இடம்பெற்றுள்ள மும்மொழி கொள்கைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என தமிழக அரசும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக லோக்சபா மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை அமல்படுத்தக்கோரி தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்ததா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சகம், ‘புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்.
மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்த மொழியும் திணிக்கப்படாது. மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம்,’ என தெரிவித்துள்ளது.