புதிய கல்வி கொள்கை மூலம் ‘கல்வி அமைச்சகம்’ என பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி!
![](https://thambattam.com/storage/2020/08/ram-nath-kovind1.jpg)
புதிய கல்வி கொள்கை பரிந்துரையின்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘மத்திய கல்வி அமைச்சகம்’ என மாற்றப்படுவதற்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்களன்று ஒப்புதல் அளித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவை புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. புதிய கல்விக்கொள்கை குழுவில் பணிபுரிந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து புதியக்கல்விக் கொள்கை வரைவின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாக மத்திய அமைச்சகத்தின் பெயர் மாற்றமும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் திங்களன்று குடியரசு தலைவர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வி அமைச்சகமாக மாற்றம் செய்யும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாற்றம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் ‘கல்வி அமைச்சகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/afsadf-300x140.jpg)
இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றப்பட்டது. இனி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
1985 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சகம் என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.