பி.எம்., கேர்ஸ்: தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

பிரதமரின் அவசரகால நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் 28-ம் தேதி, “PM CARES Fund” எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருவாக்கிய இந்த நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என பலரும் நன்கொடை அளித்தனர்.
இந்நிலையில், பி.எம்., கேர்ஸ் நிதியை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக்கோரி, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. கடந்த ஜூலை மாதத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்த போது, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம்., கேர்ஸ் நிதி இருப்பதால், தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றி, அதனை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், பிரதமரின் அவசர கால நிவாரண நிதியை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற தேவையில்லை என்று தெரிவித்தது. மேலும், பி.எம்., கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிக்க யாருக்குக்கும் தடையில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.