நீதியை சிதைத்து விடாதீர்கள்: 1,500 வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கில் நீதியை சிதைத்து விடாதீர்கள் என முறையிட்டு மூத்த வழக்கறிஞர்கள் 1,500 பேர் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஜனநாயகத்தின் அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கு என்ற தலைப்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு, பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷண், தன்னுடைய டுவிட்டர் பதிவுகளில், நீதிபதிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே விமர்சிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் நீதிமன்ற நடவடிக்கைகள் விமர்சிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இருந்த போதிலும், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரங்கள் தொடர்பான விசாரணை, வரும் 20-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினரிடையே விமர்சனத்தை எழுப்பியது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மூத்த வழக்கறிஞர்கள் 1,500 பேர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், நீதிபதிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும், நீதியை சிதைத்து விட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.