‘டி-சர்ட்’ போல, பின்னல் துணியில் சட்டை… மக்கள் மத்தியில் வரவேற்பு

பின்னல் துணியில் தயாரிக்கப்படும் சட்டைகளுக்கு உள்நாட்டில் மவுசு அதிகரித்து வருகிறது; அதனால், இவ்வகை சட்டை தயாரிப்பில், திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்காட்ட துவங்கியுள்ளன.
புதுமையான ஆடை தயாரிப்பில், திருப்பூர் பின்னலாடை துறையினர் முழு கவனம் செலுத்திவருகின்றனர். அவ்வகையில், ‘டி-சர்ட்’ போல, பின்னல் துணியில் சட்டை தயாரிப்பதற்கான முயற்சிகளில், உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் சில களமிறங்கியதில், வெற்றியும் கிடைத்துள்ளது.ஓவனுக்கு நிகரான வகையில், பின்னல் துணியில் சட்டை அவற்றுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இது, இந்த சட்டை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு டிசைன், ஏராளமான வண்ணங்களில், அரை கை, முழு கை பின்னல் சட்டை அதிகளவு தயாரிப்பதில், தொழில்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: செயற்கை நுாலிழைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பின்னல் சட்டைல வியர்வை உறிஞ்சும் தன்மை மிக்கதாக உள்ளன. மிக மிக எடை குறைவு. மென்மையான தன்மை கொண்டுள்ளன. சலவைக்குப்பின், சுருங்குவது இல்லை என்பதால், பின்னல் சர்ட்டுகளை, அவற்றின் ஆயுட்காலம் வரை, அயர்னிங் செய்ய தேவை இல்லை.எளிதில் கறைபடிவதில்லை.
இத்தகைய தனித்துவம் பெற்றிருப்பதால், தற்போது, உள்நாட்டில், இந்த சட்டைக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிய துவங்கி விட்டனர்.
ஏராளமான டிசைன், வண்ணங்களில், ஓவன் சர்ட்டுகளை மிஞ்சும் வகையில் இருப்பதால், அலுவலக பயன்பாடு, விழாக்கள் என, எல்லாவற்றுக்கும் இதனை அணியலாம்.தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களுக்கு, அதிகளவில் பின்னல் அனுப்பி வைக்கிறோம்.
சந்தையில் தேவை அதிகரிக்கும்போது, குறைந்த விலைக்கு கிடைக்கும். உள்ளாடை ரகங்கள், ‘டி-சர்ட்’ போல், பின்னலாடை சட்டைகளுக்கும், உள்நாட்டில் மிகப்பெரிய வாய்ப்பு கண்டிப்பாக உருவாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.