அரசு வேலைகள் அனைத்தும் எம்மாநில இளைஞர்களுக்கே!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ம.பி முதல்வர்!

மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
நாட்டின் பல மாநிலங்களில் அரசுப் பணிகள் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற சட்டம் உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை, நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75% சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் அரசுப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே இனிமேல் விண்ணப்பிக்க முடியும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளதாவது: “எங்கள் அரசாங்கம் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மாநிலத்தில் அரசு வேலைகளுக்கு உள்ளூர் இளைஞர்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிசி ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதற்கு ஆதரவான வழக்கில் அரசு கடுமையாக வலியுறுத்தும்” என்று சவுகான் கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேச மாநில வேலைவாய்ப்பு தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என் அன்பு மக்களே! இன்று முதல், மத்திய பிரதேசத்தின் இளைஞர்களுக்கு மாநிலத்தின் வளங்கள் மீது முதல் உரிமை கொடுக்கப்படும். அனைத்து அரசு வேலைகளும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். மாநிலத்தின் முன்னேற்றத்தில் மாநிலத்தின் திறமைகளை ஈடுபடுத்துவதே எங்கள் நோக்கம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.