மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பில் மத்திய அரசு புதிய உத்தரவு!
மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவ செவிலியர்கள், ஊழியர்கள் நாடு முழுவதும் குறிப்பாக கிராமம் கிராமமாக சென்று பணியாற்றி வருகின்றனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மருத்துவர்கள் பணி முடிந்து வீடு செல்லும்போதோ அல்லது வெளியே கடைக்கு செல்லும்போதோ தவறான புரிதல் காரணமாக தாக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, பொதுமக்களும் கோபமடைந்து சுகாதாரப் பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளதாக மருத்துவ அசோஷியேஷன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய உள் துறை அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இன்று (ஏப்ரல் 11) அனுப்பிய கடிதத்தில், “கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவைக்கேற்ப மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருக்கும் இடங்களுக்கு அவர்கள் செல்கிறார்கள் எனில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.