“2023 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற போகிறேன்!” என அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்!
![](https://thambattam.com/storage/2020/08/FInch-172-780x450.jpg)
2023 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தனது ஓய்வு குறித்து ஃபிஞ்ச் கூறியதாவது: “இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். அதுதான் என் லட்சியம். அதில் உறுதியாக இருக்கப் போகிறேன். அதோடு எனக்கு 36 வயது ஆகிவிடும். ஃபார்மும் நல்ல உடற்தகுதியும் அதுவரை விளையாட அனுமதிக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர்கள் வருடத்துக்கு 10, 11 மாதங்கள் விளையாடுகிறோம். அதனால் இந்த ஓய்வு எங்களுக்கு அரிதாகவே கிடைத்துள்ளது. எப்படியும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கால் கிடைத்த ஓய்வு அதை உறுதி செய்துள்ளது” என்றார்.
அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. ஞாயிறு அன்று பெர்த் செல்லும் ஃபிஞ்ச், தனி விமானம் மூலம் அணி வீரர்களுடன் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார்.