ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு தேநீரில் விஷம்: மருத்துவமனையில் அனுமதி

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நலல்னி, உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சாப்பிட்ட தேநீரில் விஷம் கலந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கிரா யர்மைஷ் கூறுகையில், நவல்னி, வேலை காரணமாக சைபிரீயாவிலிருந்து மாஸ்கோவுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதினால், விமானம், டோம்ஸ்க் என்ற இடத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து சைபீரியாவின் ஓம்ஸ்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கோமா நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை, சீராக உள்ளதாக கூறினாலும், அவரது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. அவரை காப்பாற்ற போராடி வருகின்றனர். அவர் அருந்திய தேநீரில் விஷம் கலந்திருக்கலாம். காலையில், அவர் தேநீர் மட்டும் தான் சாப்பிட்டார். சுயநினைவின்றி கோமா நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நாவல்னி, அந்நாட்டு அதிபர் புடினை விமர்சனம் செய்ததற்காகவும், ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தியதற்காகவும் பல முறை தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம், அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தது. அப்போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2017ல் கண்ணில் வேதி பொருள் கொண்டு தாக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அவர் நடத்தி வரும் ஊழலுக்கு எதிரான நிறுவனத்தில் பல முறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். போராட்டங்கள் நடத்தி பல முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ரஷ்ய அதிபர் தேர்தலில், புடினை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டது.