விரைவில் தொடங்குகிறது சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான உயர்மட்ட சாலை கட்டுமானப் பணி!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான உயர்மட்ட சாலையின் கட்டுமானப் பணி, பல்வேறு மாற்றங்களுடன் விரைவில் தொடங்கவுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதியஉயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது. இதையடுத்து, இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து நிறைவேற்ற தற்போது தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, ரூ.3,087 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையிலான உயர்மட்ட சாலை திட்டத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் அதை நிறைவேற்ற தமிழக அரசு முடிவெடுத்தது. இதன்படி உயர்மட்ட சாலை 6 வழிச்சாலையில் இருந்து 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், முன்னர் சாலையில் 3 இடங்களில் உள்ளே நுழையவும் 3 இடங்களில் வெளியேறவும் வழி செய்யப்பட்டிருந்தது. தற்போது துறைமுகத்துக்கு உள்ளேயும், மதுரவாயலில் சாலை முடியும் இடத்திலும் மட்டுமே வாகனங்கள் ஏறவும், இறங்கவும் முடியும் வகையில்அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாதிரிப்பேட்டை,எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக திருவள்ளூர் மாவட்டத்தின் மதுரவாயலில் இச்சாலை முடிவடைகிறது. இந்த சாலைக்காக 6,993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2,722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவான திட்டஅறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. எனவே, இதற்கான கட்டுமானபணிக்கான நிறுவனத்தை தேர்வுசெய்து, விரைவில் பணிகளை தொடங்கவுள்ளோம்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.