ஆண்டுகள் கடந்தும் பல கோடி மக்களின் தாகம் தீர்க்கும் மேட்டூர் அணையின் வயது 87!!

தமிழகத்தில் உழவுக்கு உயிரூட்டும் விதமாக தஞ்சை தரணியை செழிக்க வைத்துக் கொண்டிருக்கும் மேட்டூர் அணைக்கு இன்று 87-வது வயது.
காவிரியின் குறுக்கே, மேட்டூரில் அணை கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, 1834-ம் ஆண்டில் தொடங்கி 1924-ம் ஆண்டு வரை ஆய்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் 1925-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணி தொடங்கியது. பிரம்மாண்டமாக, 120 அடி உயரத்துக்கு நீரை தேக்கிடும் வகையில், மொத்தம் ரூ.4.80 கோடி செலவில், மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி, மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 17-ம் தேதி 99.03 அடியாக உயர்ந்தபோது, அணையின் நீர் மட்டம் ஓரிரு நாளில் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீர் வரத்தில் தொடர் சரிவு ஏற்பட்டதால், அணையின் நீர் மட்டம் 19-ம் தேதியன்று மீண்டும் 97.94 அடியாக குறைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது நீர் வெளியேற்றத்தை விட, நீர் வரத்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 100 அடியை எட்ட வாய்ப்பிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, “தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் அணைக்கு, சுற்றுலா முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கர்நாடகாவில் உள்ள பிருந்தாவன் பூங்கா போன்று அழகுபடுத்த வேண்டும்” என்று மேட்டூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.