கேரளாவிலிருந்து பெங்களுரு வந்து கொரோனாவால் இறந்த மேற்குவங்க சிறுமிக்கு இறுதி மரியாதை செய்த மாமனிதர்!
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான பிரேசர் டவுன் பகுதியில் தேநீர்க்கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக், கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குழந்தையின் உடலுக்கு கனத்த இதயத்துடன் அவர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மக்களை நெகிழவைத்துள்ளது.
நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர், இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்திச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி துன்பியல் காட்சியாக மனித மனங்களை நொறுக்கிவிட்டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் தேநீர்க்கடை நடத்திவரும் ரசாக், தன்னார்வலராகவும் பொதுச்சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
பெங்களூர் செயிண்ட் ஜான் மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்குச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துக்கொண்டு உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்குகளை முறைப்படி செய்துள்ளார். அப்போது தன் அன்பு மகளை இழந்த துக்கத்துடன் நின்றிருந்த குழந்தையின் பெற்றோர் ரசாக்கின் தன்னமலமற்ற சேவைக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்த அவர் கூறுகையில், “அந்தப் பெண் குழந்தை மேற்குவங்கத்தைச் சேர்ந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இறந்து விட்டது” என்று தெரிவித்தார்.
சாதாரண தேநீர் கடை நடத்திவருபவர் எந்த பாகுபாடும் காட்டாமல் இறந்த சிறுமிக்கு இறுதி மரியாதை செய்தது மனிதத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது