“ஒரு நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகி வருகிறது!” பேராபத்தை நோக்கி செல்கிறதா உலகம்…?

சுற்றுச்சூழல் ரீதியாக உலகின் பருவநிலை மாற்றங்களைத் தீர்மானிக்கும் கிரீன்லாந்தில் ஒரு நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகிவருவதாக தனியார் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்ற பாதிப்பின் விளைவுகள் குறித்து சமீபத்திய காலத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
அந்தவகையில் சமீபத்தில் கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கிரீன்லாந்தின் உள்ள பனிப்பாறைகள் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 586 பில்லியன் டன் பனி கடலில் உருகியுள்ளது. இது நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகுவதற்கு சமம். அதாவது கலிபோர்னியா அளவுள்ள மாகாணத்தை 4 அடி உயரத்துக்கு நீரால் சூழும் அளவுக்கு சமம் என்று ஜெர்மனியில் உள்ள ஆல்பிரட் வெஜனர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கிரீன்லாந்தில் வேகமாக பனிப்பாறைகள் உருகி வருவது தெரியவந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் கிரீன்லாந்தில் சராசரியாக 255 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகியுள்ளன. தற்போதைய தரவு 2003ஆம் ஆண்டின் இழப்பை விட மிக அதிகம் என்று இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும் 2019-ல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக 586 பில்லியன் டன்கள், அதாவது 140 ட்ரில்லியன் கேலன்கள் (532 ட்ரில்லியன் லிட்டர்கள் தண்ணீர்) அளவுக்கு பெரிய அளவில் பனி உருகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பனி உருவாக எத்தனையோ ஆண்டுகள் எடுக்கிறது, ஆனால் உருகுவது வெகுவேகமாக நடைபெறுவதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கூட கிரீன்லாந்து பனிப்படலம் சராசரியாக 108 பில்லியன் டன்கள் உருகின. ஆனால் 2019-ல் திடீரென இத்தகைய அதிகரிப்பு பேராபத்தின் அறிகுறி கடந்த ஆண்டு பனி உருகியதில் உலக அளவில் கடல்களில் நீர்மட்டம் 1.5 மி.மீ அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான, நினைத்துப் பார்க்க முடியாத கடல்நீர்மட்ட அதிகரிப்பாகும்” என்கிறார் நாஸாவின் ஆய்வாளர் அலெக்ஸ் கார்டனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வெப்பக் காற்று பெரிய அளவில் கிரீன்லாந்திற்கு வந்து இந்தப் பனி உருகலை அதிகப்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டின் கிரீன்லாந்து பனி உருகல் கவலையளிப்பதான ஒரு விஷயம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்து பனிக்கட்டி முழுவதும் உருகினால், உலகின் கடல் மட்டம் ஆறு மீட்டர் உயரும் என ஆய்வாளர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.