பெண்களை அதிகம் பயன்படுத்தும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள்!

இந்திய அறிவியல் ஆராய்ச்சி பற்றிய தரவுகள் 2018-ம் ஆண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறிகாட்டிகளில் வெளியானது. அதன் சுருக்கத் தொகுப்பு இம்மாதம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தனியார் துறை ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசாங்க நிதியுதவி கொண்ட ஆராய்ச்சி நிறுவனங்களை விட பெண்களை ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளில் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
ஆர் & டி என அழைக்கப்படக் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில், தனியாரில் 20,351 பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் 15,011 பேர் அதாவது நான்கில் மூவர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் துணை ஆய்வு அல்லது நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவே அரசு உதவி பெறக் கூடிய பெரிய நிறுவனங்களில் 23,008 பெண்கள் பணியாற்றினாலும், 10,138 பேர் மட்டுமே ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் உள்ளது. தனியார் துறையில் 15 ஆயிரம் பெண் விஞ்ஞானிகளும், 92 ஆயிரம் ஆண் விஞ்ஞானிகளும் நேரடி ஆராய்ச்சி பணிகளில் உள்ளனர். அரசு உதவி பெறும் ஆய்வு நிறுவனங்களில் 10 ஆயிரம் பெண் விஞ்ஞானிகளும், 43,753 ஆண் விஞ்ஞானிகளும் உள்ளனர். பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக மருத்துவ அறிவியல் மற்றும் இயற்கை அறிவியலில் விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.