“சண்டையே போடாத இவரெல்லாம் ஒரு கணவரா…” டைவர்ஸ் கேட்ட மனைவியால் நீதிபதிகள் அதிர்ச்சி

உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை.
இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், கடந்த 18 மாதங்களாக ஒருநாள் கூட சண்டை போடாததால் சோர்வடைந்து விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் கணவர் சமைப்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும்கூட உதவுகிறாராம். ஒருநாள்கூட அவரிடம் கத்தாமல், எந்தவொரு பிரச்னையிலும் ஏமாற்றாமல் இருக்கிறாராம். இவ்வளவு அன்பால் அந்த பெண்ணுக்கு மூச்சே திணறிவிடுவதாகவும் கூறியிருக்கிறார். அந்த பெண் ஏதாவது தவறு செய்தால்கூட கணவர் மன்னித்துவிடுகிறாராம். ஆனால் அந்தப் பெண் சண்டைபோட விரும்புகிறாராம். எல்லாவற்றையும் இப்படி ஒத்துப்போகும் ஒரு நபருடன் வாழ விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
விவாகரத்துக்கான காரணத்தைக் கேட்ட நீதிமன்ற அலுவலர் இந்த மனு அற்பமான காரணத்தைக் கொண்டுள்ளதாக நிராகரித்துவிட்டார். இந்த மனுவை உள்ளூர் பஞ்சாயத்திடம் கொண்டுசென்றிருக்கிறார் அந்தப் பெண். வேறு ஏதும் காரணம் இல்லாததால், அவர்களும் அதை நிராகரித்துவிட்டனர்.
இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், அவள் ஒருதவறும் செய்ததாக நான் நினைக்கவில்லை. எப்போதும் சரியான ஒரு கணவராக இருக்க மட்டுமே தான் விரும்புவதாக கூறியிருக்கிறார். தனது மனைவியின் விருப்பப்படி, மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு அந்த பெண்ணின் கணவரும் ஷரியா நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்திருக்கின்றனர்.