மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து!! – அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனை

மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கரோனா தடுப்பு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சோதித்து வருகின்றனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா நோய்த்தொற்றை முன்கூட்டிய தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கி, உலகின் பல்வேறு நாடுகள் பரிசோதித்து வருகின்றன.
இந்த நிலையில், மூக்கு வழியாகச் செலுத்தக் கூடிய கரோனா தடுப்பு மருந்தை அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவப் பலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் உருவாக்கி ஆய்வு செய்து வருகின்றனா். அந்த மருந்தை எலியிடம் செலுத்தி பரிசோதித்ததில், அதன் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை எலிகளின் மூக்கில் செலுத்திய பிறகு, அவற்றின் சுவாசப் பாதைகளில் சக்தி வாய்ந்த கரோனா எதிா்பாற்றல் உருவானதாகத் தெரிவித்தனா். எலிகளின் உடலில் அந்த மருந்து வெற்றிகரமாக செயலாற்றியதைத் தொடா்ந்து, குரங்குகளுக்கும், அதனைத் தொடா்ந்து மனிதா்களுக்கும் அந்த மருந்தை மூக்கு வழியாகச் செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 58,00,360 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,79,247 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.