120 கி.மீ சைக்கிளில் சென்று புற்றுநோய் சிகிச்சை பெற்றவர் மரணம்!

ஊரடங்கு சமயத்தில் வாகன வசதியில்லாததால், புற்றுநோய் சிகிச்சைக்காக கணவருடன் கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு 120 கி.மீ சைக்கிள் சென்று சிகிச்சை எடுத்த பெண் தற்போது காலமானார்.
கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஏழைத் தம்பதிகள் அறிவழகன் – மஞ்சுளா (52). கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மஞ்சுளாவிற்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது.
அதற்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மஞ்சுளா. மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு செல்ல முடியாததால் மிகுந்த வலி ஏற்பட்டு துடித்துள்ளார். மனைவியின் வேதனையை கண்டு பொறுக்க முடியாத கணவர் தனது துருப்பிடித்த பழைய சைக்கிளில் அமர வைத்து, 120 கி.மீ., துாரமுள்ள புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்த்தார்.
கணவரின் இந்த பாசப்போராட்டத்தை கண்டு பலரும் கண் கலங்கினர். சிலர் பொருள் உதவி, பண உதவி செய்தனர். சிகிச்சை முடிந்து ஆம்புலன்சில் வீடு திரும்பியவர், வீட்டிலேயே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளார். மஞ்சுளா மறைவு, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.